ஒவ்வொரு உறவும் புத்தம் புதிதாக பூத்த பூ மாதிரி இருக்க வேண்டும். மென்மை, நறுமணம், தனித்துவ குணம் ஆகியவை இல்லாவிட்டால் எந்தப் பூவுக்குமே மதிப்பில்லை. அது போலத்தான் உறவுகளும்.
காதலில் ஈடுபடுவோர் பலரும் இதை பல நேரங்களில் மறந்து விடுகிறார்கள். காதல் என்றால் மணிக்கணிக்கில் பேசுவது, சந்தடி சாக்கில் முத்தமிடுவது, கைகளைப் பிடித்துக் கொண்டு வசனம் பேசுவது, உடலோடு உடல் உரச சந்தர்ப்பம் கிடைக்குமா என்று காத்துக் கிடப்பது என்று சலனமாகிறார்கள். ஆனால் அதெல்லாம் பிறகுதான், அதற்கு முன்பு உங்களது காதலியின் இதயத்தை நீங்கள் வருட வேண்டும்.
ஒரு கவிஞன் சொன்னான்...
அவளது இதயத்தை வருடு, உடம்பை அல்ல
அவளது கவனத்தை திருடு, மகிழ்ச்சியை அல்ல
அவளை சிரிக்க வை, அவளது கண்ணீரை வீணாக்க விடாதே...
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் பாருங்கள். ஒவ்வொரு காதலனும், தனது காதலியை தன் பக்கம் ஈர்க்க என்னவெல்லாமோ செய்கிறான். ஆனால் பெரும்பாலானாவர்களிடம் இதயம் தாண்டி வேறு ஏதோ ஒரு எதிர்பார்ப்புதான் இருக்கிறது.
ஆனால் இதயத்தோடு நின்று பாருங்கள், சொர்க்கத்தை உணருவீர்கள். காதலியின் உடம்பை விட அவளது இதயத்தை அதிகம் நேசியுங்கள். அவள் மீது எக்கச்சக்கமான பாசத்தைக் கொட்டுங்கள். அவள் மீது அன்பை வரையறை இல்லாமல் சொரிந்து பாருங்கள். அவள் மீது அலாதிப் பிரியத்தைக் காட்டிப் பாருங்கள். பிறகு பாருங்கள், உங்களிடம் சொக்கிப் போவாள்.
அன்பை விட, பிரியத்தை விட, பாசத்தை விட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை. அன்புக்குத்தான் எல்லோருமே அடிமை. இதயத்தை வருடுவதில் கிடைக்கும் இன்பம், உடம்பைத் தொடுவதில் கிடைக்கும் இன்பத்தை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது.
நீ என் பிரிய சகி, நீயே என் உயிர், நீயே என் மூச்சு, நீயே என் சக்தி என்று சொல்லும்போது கிடைக்கும் சந்தோஷமும், நிம்மதியும், காதலியின் உடம்பை வர்ணிக்கும்போது சத்தியமாக கிடைக்காது. இதுதான் காதல், உடம்பு மீது பாசம் வந்தால் அது காமம்.
காதலியின் கவனத்தை ஈர்க்க எத்தனையோ வழிகள் இருக்கலாம். ஆனால் அன்பால் உங்கள் பக்கம் திருப்ப முயற்சியுங்கள். அதுதான் ஆழமான உறவுக்கு நல்ல அடித்தளமாகும். அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்றாரே வள்ளுவர், எவ்வளவு சத்தியமான வார்த்தை... அன்பை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, அதை அடைத்து வைக்க முடியாது. எப்படி வைத்தாலும் வெடித்துக் கிளம்பி வெளிவந்து உங்கள் மீது பாச மழையாக பொழியத்தானே செய்யும்... காதலுக்கும் அதுதாங்க சக்தி.
காதலியின் கண்களைப் பார்த்தாலே ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஒவ்வொரு காதலனுக்கும் வருவது இயற்கை. காரணம், அந்த காந்தக் கண்களைப் பார்த்துதானே ஒவ்வொரு ஆணும் முதலி்ல சொக்கிப் போகிறான். கண்களின் சந்திப்பை விட வேறு எந்த சந்திப்புமே பெரிதில்லை - காதலில்.
காதல் என்பது ஒரு அனுபவம். அனுபவித்துப் பார்க்கும்போதுதான் அதன் அர்த்தம், ஆழம், சுகம், வேதனை எல்லாமே புரியும். அந்தக் காதல் கடைசி வரை இதயத்தில் நீக்கமற நிறைந்திருக்க அலாதி அன்பும், அதீத பாசமும், எல்லையில்லா பிரியமும் உங்களுக்கு எக்கச்சக்கமாக வேண்டும். அதை மனம் முழுக்க நிரப்பிக் கொண்டு வாழப் பழகுங்கள், காதல் சுகமாக இருக்கும்.
No comments:
Post a Comment