வாழ்க்கையில் பல விஷயங்களை நாம் தேடிப் போய்க் கற்றுக் கொள்கிறோம். சில நேரங்களில் நமக்கு வாழ்க்கையே பல விஷயங்களை கற்றுத் தரும் - அனுபவங்கள் மூலமாக.
உன்னுடைய நண்பர்களைச் சொல் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உள்ளது. அது மிக மிக சத்தியமான வார்த்தை. காரணம், நமது நட்பு வட்டாரம் எப்படி இருக்கிறதோ, அந்த சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் நாமும் கிட்டத்தட்ட இருப்போம். சில நேரங்களில் இது விதி விலக்காக இருக்கலாம்.
நாம் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும்போது அதை நமக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் அல்லது அதற்குக் காரணமானவர்களுக்கு நன்றி சொல்ல பல நேரங்களில் மறந்து விடுகிறோம். உனக்கு எதுக்கு மச்சான் நன்றி சொல்லிக்கிட்டு, நீ என் நண்பேண்டா என்று ஹாயாக சொல்லி விட்டுப் போய் விடுகிறோம். ஆனால் அது தவறு. உங்களுக்கு ஒருவர் மூலம் ஏதாவது நல்ல விஷயம் கற்றுக் கொள்ள நேரிடும்போது நன்றி சொல்லுங்கள். அது உங்களது இதயத்திற்கும், மனதுக்கும் நல்லது என்கிறார்கள் மன நல நிபுணர்கள்.
நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு அவருடன் நாம் நெருங்கிப் பழகியதே முக்கியக் காரணம்.
சரி எப்படியெல்லாம் நன்றி சொல்லலாம், எதற்கெல்லாம் நன்றி சொல்லலாம்... பார்ப்போமா...
சிலருக்கு சில கெட்ட பழக்க வழக்கங்கள் இருக்கலாம். அதை விட முடியாமல் தவித்துப் போயிருப்போம். என்னவெல்லாமோ செய்து பார்த்திருப்போம். முடியாமல் போயிருக்கும். ஆனால் நாம் ஒருவருடன் பழக ஆரம்பித்து அவர் மீது நமக்கு மரியாதையும், அன்பும் ஏற்பட்டு அந்த நல்ல நட்பின் காரணமாக அந்தப் பழகத்தை விட்டிருப்போம் - அதற்காக நன்றி சொல்லலாம்.
தினசரி வாழ்க்கையை அலுப்பும், சலிப்புமாக உப்புச் சப்பில்லாமல் ஓட்டிக் கொண்டிருந்திருப்போம். சுறுசுறுப்பாக இல்லாமல் எப்போதும் ஒரு வித சோம்பேறித்தனம் நமக்குள் ஒட்டிப் போயிருக்கும். அதை உங்களுக்கு உணர்த்த ஏதாவது ஒரு விஷயம் உதவியிருக்கும் - அப்படி அதை உணர்த்தியவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்லலாம்.
வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் ஓடிக் கொண்டிருந்திருப்பீர்கள். இல்லை, இதுவல்ல உன் வாழ்க்கை, உனக்கென்று ஒரு இதயம் இருக்கிறது. உன் மீது பரிவும், அன்பும் காட்ட அது துடித்துக் கொண்டிருக்கிறது என்று ஏதாவது ஒரு அன்புக் கரம் உங்களை நோக்கி நீண்டு வந்திருக்கும் - அதற்காக நீங்கள் நன்றி சொல்லலாம்.
- இதை நாளை செய்வோம், அதை நாளை மறு நாள் செய்வோம் என்று எதையுமே தள்ளிப் போட்டுக் கொண்டிருந்திருப்பீர்கள். அப்படி இருக்காதேடா தவறு என்று உங்களது நட்பு உங்களுக்கு உணர்த்தியிருக்கலாம் - அதற்காகவும் நன்றி சொல்லலாம்.
பாசத்துக்காக ஏங்கிப் போயிருந்திருப்பீர்கள், அன்புக்காக அலைந்து திரிந்திருப்பீர்கள், ஆதரவுக்காக கதறித் துடித்திருப்பீர்கள். கொடும் வெயிலில் கடும் கஷ்டத்தில் நீங்கள் துடித்துக் கொண்டிருந்தபோது உங்களுக்காக வந்து சேர்ந்திருக்கும் ஒரு நிழல் - அதற்காகவும் நன்றி சொல்லலாம்.
இப்படி உங்களுக்காக, உங்கள் நலனுக்காக துடிக்கும் இதயங்களுக்காகவும், உங்கள் பால் அன்பு செலுத்துவோருக்காகவும், இன்னும் பல காரணங்களுக்காகவும் நன்றி சொல்லத் தவறாதீர்கள். நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தைதான். ஆனால் உங்களுக்கு உங்களது வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வைத்தவர்களுக்கு, உங்களையே புதுப்பிக்க உதவியர்களுக்கு நீங்கள் சொல்லும் நன்றி என்ற இந்த சிறிய வார்த்தை மிகப் பெரிய சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆறுதலையும் நிச்சயம் தரும்.
எனவே, யாராவது உங்களுக்கு எந்த வகையிலாவது உதவியிருந்தால், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டியிருந்தால், தயங்காமல் ஒரு நன்றி வைத்து விடுங்கள்.. மனசு லேசாகிப் போகும்.
No comments:
Post a Comment