Wednesday, July 3, 2013

* ஓடிப் போவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்


ஓடிப் போவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்


திருமண ஏற்பாடு சாதாரண விஷயமல்ல. மாப்பிள்ளை பார்ப்பதில் தொடங்கி, நகை சேர்ப்பது, மண்டபம் புக்கிங் செய்வது, சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வது, பத்திரிகை அடிப்பது, உறவினர்களை அழைப்பது என ஏகப்பட்ட வேலைகள். அதோடு திருமணம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற பதைபதைப்பும் இருக்கும். இப்படி எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, திருமணம் நடக்கப் போகும்போது, திடீரென மணப்பெண் ஓடிப் போனால் எப்படி இருக்கும்? அதனால் எத்தனை பேருக்கு வேதனை? அப்படித்தான் நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில், மணப்பெண் காதலனுடன் ஓடி விட்டார். விழுப்புரம் மாவட்டம் சித்தாள் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி.

கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவி. பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. ஜெயபாரதியின் மாமன் மகன். வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க 2 வாரம் முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. நாளை திருமணம். தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஜெயபாரதியின் அப்பாவும், அம்மாவும் உறவினர்களுக்கு பத்திரிகை வைக்க புறப்பட்டு சென்றனர். வீட்டில் ஜெயபாரதி மட்டும் இருந்தார். மதியம் வீடு திரும்பிய போது, மகளை காணாமல் திடுக்கிட்டனர். உறவினர்கள் வீடுகள் உள்பட அக்கம்பக்கத்தில் தேடினர். பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்தையும் காணவில்லை. தோழிகளிடம் விசாரித்த போது அதே ஊரை சேர்ந்த பிஎஸ்சி 2ம் ஆண்டு மாணவர் காமராஜ் என்பவரை ஜெயபாரதி காதலித்து வந்தது தெரிய வந்தது.

கல்லூரிக்கு பஸ்சில் சென்றபோது இருவரும் பேசி வந்துள்ளனர். வீட்டில் திடீரென திருமண ஏற்பாடுகள் நடந்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெயபாரதி, காதலனுடன் ஓடியது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்தப்பட்ட மாணவி, கடத்திச் சென்ற கல்லூரி மாணவர் காமராஜ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் இரு வீட்டாரும் சோகத்தில் உள்ளனர். திருமண பேச்சை எடுக்கும்போதே, பெண்ணின் சம்மதத்தை கேட்க வேண்டும். வேறு யாரையாவது காதலித்தால் பெண்களும் அதை பெற்றோரிடம் கூறி விட வேண்டும். சரி, சரி என தலையை ஆட்டி விட்டு, கடைசி நேரத்தில் பெற்றோரை தவிக்க விட்டு ஓடிப் போகக் கூடாது. இதனால் மணமகன் உள்பட எத்தனை பேருக்கு அவமானம்? ஓடிப்போகும் காதலர்கள் இதை ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்.


No comments:

Post a Comment