பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!’: அந்த பதினாறும் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
புதிதாகத் திருமணமாகும் மணமக்களை ‘பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!’ என வாழ்த்துவது வழக்கம். அவ்வாறு, வாழ்த்தும் போது ‘ஐயோ! பதினாறா எனக்கு வேண்டாம்! என்று மணமகள் வெட்கப்படுவதும், ‘பதினாறா? என்னால் முடியாது’ என்று மணமகன் கூறிச் சிரிப்பதும் கிட்டதட்ட எல்லா மணமேடைகளும் கண்ட நகைச்சுவைதான்.
‘பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!’ என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது!’ இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது.
அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி?
அகிலமதில் நோயின்மை கல்விதன் தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி
ஆகுநல் லூழ்நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப்பாய் – (அபிராமி அந்தாதி பதிகம்)
1. உடலில் நோயின்மை,
2. நல்ல கல்வி,
3. தீதற்ற செல்வம்,
4. நிறைந்த தானியம்,
5. ஒப்பற்ற அழகு,
6. அழியாப் புகழ்,
7. சிறந்த பெருமை,
8. சீரான இளமை,
9. நுண்ணிய அறிவு,
10. குழந்தைச் செல்வம்,
11. நல்ல வலிமை,
12. மனத்தில் துணிவு,
13. நீண்ட வாழ்நாள் (ஆயுள்),
14. எடுத்தக் காரியத்தில் வெற்றி,
15. நல்ல ஊழ் (விதி),
16. இன்ப நுகர்ச்சி
ஆகியவையே அந்தப் பதினாறு பேறுகள் அல்லது செல்வங்கள்.
நான் பார்க்கும் உலகம்
No comments:
Post a Comment