Thursday, May 16, 2013

* உங்கள் உறவு முறியும் நிலையில் உள்ளதா ...?



தொடக்கம் என்று இருந்தால் நிச்சயம் முடிவு என்றும் ஒன்று கூடவே இருக்கும். அதுபோலத்தான் பிரிவும். அது வரும்போது எதிர்கொள்ளத் தயாராகிக் கொள்வதுதான் எல்லோருக்கும் நல்லது.

ஒவ்வொரு உறவும் ஒரு கட்டத்தில் உராய்வுகளையும், உரசல்களையும், சந்திக்க நேரிடுகிறது. இதுபோன்ற நிலையில் பல உறவுகள் முறியும் நிலைக்குப் போய் விடுகின்றன.

பிரிவோம் என்ற வார்த்தையைச் சொல்லவே பலருக்கு கிலியாக இருக்கும். பிரிந்து விடுவோம், ஒருவரை ஒருவர் மறந்து விடுவோம் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதை பதைத்துப் போய் விடுகிறது. இனிமேல் நமக்குள் எதுவும் இல்லை என்பதைச் சொல்ல பலருக்கும் தைரியம் வருவதில்லை. ஆனால் இனியும் உறவைத் தொடர முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படும்போது என்னதான் செய்வது...?

பிரிவு கஷ்டம்தான்... மன முறிவு பெரும் துயரம்தான்... ஆனால் எடுத்தாக வேண்டும் என்று வரும்போது அதைச் சமாளிப்பது எப்படி...?

பிரிய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அதை எளிதாக ஏற்றுக் கொள்ள முதலில் உங்களது மனதைப் பழக்கப்படுத்திக கொள்ளுங்கள். இன்று எல்லாவற்றுக்குமே முதலில் மனசுதான் காரணமாக அமைகிறது. மனசைக் கட்டுக்குள் கொண்டு வந்து உங்கள் சொல்படி கேட்க வைப்பது நிச்சயம் பெரும் சவாலான காரியம்தான்.

நெஞ்சம் பதறத்தான் செய்யும், மனசெல்லாம் வலிக்கும், எங்காவது போய் விடலாமா என்று கூடத் தோன்றும்... ஆனால் எங்கு போவீர்கள், என்ன தான் செய்ய முடியும் உங்களால்... முயன்றுதான் பார்க்க வேண்டும், முடிவு என்று வந்து விட்டால்.

டெனிஸ் நோல்ஸ் என்ற மன நல ஆலோசகர் இப்படிக் கூறுகிறார்... உறவு முறிவு என்பது மிகவும் வேதனையான விஷயம். பலரால் அதை ஜீரணிக்கவே முடியாது. ஆனால் உங்களது மனதை நீங்கள் எப்படித் தட்டிக் கொடுத்து உங்களது கட்டுக்குள் கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அந்தப் பிரிவை தாங்கும் சக்தி உங்களுக்கு கைகூடும்...

பிரிய வேண்டிய நிலை வரும்போது, பிரிவுக்கான சூழல்கள் உங்களை நோக்கி பாயும்போது அதைத் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். மனதை கட்டுப்படுத்துங்கள், கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள். இப்படிச் செய்வதன் மூலம் மனதை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிறார் நோல்ஸ்.

உறவுகள் எப்போதுமே பசுமையானவை... கண்களுக்குக் குளிர்ச்சி தரும் பச்சைப் புல்வெளி போல மனசுக்குள் ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கக் கூடியவை. அதிலும் உடல் ரீதியானதாக இல்லாமல், மனதைத் தொட்ட உண்மையான காதலுக்கும், உறவுகளுக்கும் என்றுமே மரணம் கிடையாது.
உன் உடல் வேண்டாம், உன் காதல் போதும், உன் அன்பு போதும், உன் பாசம் போதும் என்று நினைத்திருக்கும் மனங்களுக்கு பிரிவுகள் பெரும் பிரளயமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே எந்தச் சூழ்நிலையில், எந்த நிலையில் உறவுகள் பிரிந்தாலும், முறிந்தாலும், மனசுக்குள் அந்த உறவுகளின் நினைவுகள் ரீங்காரமிட்டபடிதான் இருக்கும்...நீங்கள் பிரிந்து போனாலும், உங்களை உங்களது உறவுகள் வேண்டாம் என்று தட்டி விட்டாலும். அந்த நினைவுகளுடன் நீங்கள் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து விட முடியும்... !

No comments:

Post a Comment