உங்கள் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?' என்று யாரிடம் கேட்டாலும், `வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக' சொல்கிறார்கள். இரண்டாவது இடத்தை குடும்பத்திற்கு கொடுப்பதாக சொல்கிறார்கள். கடைசியாகத்தான் `தன்னை'ப் பற்றிய கவனிப்புக்கு நேரம் ஒதுக்குவதாக சொல்கிறார்கள்.
இன்று பெரும்பாலானோர் அதிக வருமானத்திற்காக உடலை வருத்தி அதிக நேரம் வேலை செய்கிறார்கள். 8 மணிநேர வேலை 10 மணிநேரமாகி விடுகிறது. பத்து மணி நேர வேலை என்றால், போக்குவரத்து நெருக்கடியால் போக-வர நான்கு மணி நேரம். அதனால் 14 மணி நேரத்தை வேலைக்காக ஒதுக்கவேண்டியுள்ளது.
வேலை முடிந்து, மனமும்-உடலும் களைத்து, சக்தியற்ற நிலையில் வீட்டிற்கு வரும் அவர்களால் குடும்பத்திற்கு 2 மணி நேரமே ஒதுக்கமுடியும். கவலையாக இருக்கும் மனமும், உடலும் அந்த நேரத்தில் ஆறுதலையும், ஓய்வையும்தான் எதிர்பார்க்கும்.
சக்தியற்ற நிலையில் களைப்பாக, வேதனை, வலியுடன் இருக்கும் அவரால் தன் குடும்பத்தாருக்கு அன்பு, அமைதி, மகிழ்ச்சியை எப்படி தர இயலும்? தன்னிடம் இருக்கும் எரிச்சலையும், கோபத்தையும், அலுப்பையும்தான் குடும்பத்தினருக்கு வழங்கஇயலும். வேலைக்கு செல்லும் கணவரும், மனைவியும் ஒரு உண்மையை புரிந்துகொள்ளவேண்டும்.
அவர்களிடமிருந்து அவர்களது குடும்பத்தினர் பணத்தை மட்டுமே எதிர்பார்க்கவில்லை. அன்பையும். அரவணைப்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் எதிர்பார்க்கிறார்கள். இன்று வேலையின் பொருட்டு, வருமானத்தின் பொருட்டு, தன் அமைதியை, மகிழ்ச்சியை தொலைத்துவிட்ட பெரும்பாலான குடும்பங்களை நாம் பார்க்கிறோம்.
வசதிகள் நிறைந்த ஏ.சி.யுடன் இருக்கும் படுக்கை அறையில், தூக்கமில்லாமல் அழுது கொண்டு இரவைக் கழிக்கும் குடும்பங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. விவாகரத்துகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. `நாம்' முதலில் நம்மை கவனித்து கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சியும், அன்பும், அமைதியும் நிறைந்த குடும்பத்தினர் என்னை மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார்கள். நான் எனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஒன்றாக இருப்பது 2-3 மணி நேரம்தான் ஆனாலும் அந்த நேரம் மகிழ்ச்சிமிக்கதாக, சக்தி நிறைந்ததாக இருக்கிறது.
குடும்பத்தினர் என்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விட, நான் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம்தான் என்னிடம் நிரம்பியிருக்கிறது'- என்ற சிந்தனையை உங்களுக்குள் உருவாக்குங்கள்.
இதனை வாய்விட்டு சொல்லுங்கள். இதனை செயல்படுத்துங்கள். இன்றிலிருந்து உங்கள் வாழ்க்கையின் வரிசையை மாற்றி அமையுங்கள். `நான்', `எனது குடும்பம்', `எனது வேலை' என்று மாற்றி வரிசைப்படுத்துங்கள். அதற்கு தக்கபடி வாழ பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.
No comments:
Post a Comment